கொரோனா ஊரடங்கு சட்டத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஒன்றும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் பாஸ் ஆகி அடுத்த வகுப்புகளுக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கேரளாவில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே வாட்ஸ்அப் குரூப்புகளை ஏற்படுத்தி பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. யூடியூப் மூலமும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் சில பள்ளிகளில் மாணவர்களின் வாட்ஸ்அப் குரூப்புகளில் ஊடுருவி ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை பகிர்ந்தது மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் என்ற இடத்தில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் கடந்த வாரம் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சூம் செயலி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அப்போது திடீரென ஒருவர் அதில் ஊடுருவி ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டார்.
இதைப் பார்த்த மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த பள்ளி முதல்வர் குற்றிப்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்த நபர் பள்ளியின் சூம் பாஸ்வேர்டை திருடி அதில் ஊடுருவியது விசாரணையில் தெரியவந்தது.மேலும் சில பள்ளிகளிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.