கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதாக பேஸ்புக் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை வைத்து காங்கிரஸ் கட்சி பேஸ்புக் நிறுவனம் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றம் சாட்டி வந்தது. தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தது. இதற்கு பல முறை பேஸ்புக் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் விளக்கம் கொடுத்திருக்கிறது.
பேஸ்புக் இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குநர், துணைத் தலைவர் அஜித் மோகன், இது தொடர்பாக பேசுகையில், ``பேஸ்புக் எப்போதுமே அனைவருக்கும் கிடைக்கும் ஒன்று. வெளிப்படையான, பாகுபாடு இல்லாத மக்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் தளமாக இதுவரை பேஸ்புக் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக, எங்கள் கொள்கைகளை நாங்கள் சொல்லுகின்ற முறையில் பாரபட்சம் காட்டுவதாகக் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மிகத் தீவிரமாக நாங்கள் எடுத்துக் கொண்டு செயல்படுகிறோம். வெறுப்பும், மதவெறியும் எந்த வடிவில் வந்தாலும் அதனை நாங்கள் கண்டிக்கிறோம் என்பதை இங்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தங்களது விதிமுறைகளை மீறும் எந்தப் பதிவையும், இந்தியப் பிரபலங்கள் பகிர்ந்தால் அவை நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அவை நீக்கப்படும் என உறுதியளிக்கிறேன்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.