பெங்களூரு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள், சில நாட்களுக்கு முன் அதாவது, ஆகஸ்ட் 21 ம் தேதி பெங்களூருவின் கல்யாண் நகரில் உள்ள ராயல் சூட்ஸ் ஹோட்டல் குடியிருப்பில் இருந்து 2.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இதனைக் கைப்பற்றினர். இதன்பின் நடந்த விசாரணையின் ஒரு பகுதியாக, பெங்களூருவின் டோடகுப்பியில் ஒரு பெண் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இந்த பெண் தான் பெங்களூரு நகரின் போதைமருந்து சப்ளையில் கிங் எனக் கூறப்படுகிறது. பெங்களூரு நகரில் போதைமருந்து மாத்திரை சப்ளை இந்தப் பெண் மூலமாகவே நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
அவரின் கைதின்போதே போதைமருந்துகளும் அவருடன் சேர்த்து மேலும் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்தது. இதுதொடர்பாக பெங்களூரு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் துணை இயக்குநர் கே பி எஸ் மல்ஹோத்ரா பேசுகையில், ``சமூகத்தின் முக்கியமான பிரமுகர்களுக்கு இந்தக் கும்பல் போதைப்பொருள் சப்ளை செய்துவந்தது தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் முக்கிய நடிகர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இவர்களின் கஸ்டமர்களாக உள்ளனர். பிட்காயின்களுக்கு ஈடாக இந்தப் போதை மருந்துகளை ஆன்லைன் மூலம் இவர்கள் விற்பனை செய்து வந்துள்ளனர் வந்துள்ளனர். இது தொடர்பாக மேலும் பலரை என்சிபி பெங்களூரு பிரிவு கைது செய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.