மும்பையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாஸ்கர் ஜாதவ். கடந்த 5 வருடங்களுக்கு முன் அதாவது 2015 ம் ஆண்டு மும்பை சென்ட்ரலில் உள்ள ஒரு வெஜிடேரியன் ரெஸ்டாரண்டுக்கு சென்ற இவர், ஒரு பேமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கினார். அதில் அதிக பட்ச விலை ₹ 165 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ரெஸ்டாரண்டில் ₹10 கூடுதலாக ₹175 வாங்கினர். அதிகபட்ச விலையை விட ₹10 கூடுதலாக இருக்கிறதே என்று ஜாதவ் கேட்டபோது, 'இது சாதாரண பெட்டிக்கடை அல்ல, ரெஸ்டாரண்ட் என்பதால் இப்படித் தான் விலை இருக்கும்' என்று அலட்சியமாக அங்கிருந்த விற்பனையாளர் கூறியுள்ளார்.
இது குறித்து ஜாதவ், மும்பை நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையில் 5 வருடங்களுக்குப் பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவிடம் ₹10 கூடுதலாக வாங்கிய ரெஸ்டாரண்டுக்கு நுகர்வோர் நீதிமன்றம் ₹2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. கடந்த 24 வருடங்களாக அந்த ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது. தினமும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அவர்களுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.
இதுபோல அதிகபட்ச விலையை விடக் கூடுதல் வைத்து விற்பனை செய்து வந்ததின் மூலம் இதுவரை ரெஸ்டாரன்டுக்கு மிக அதிக லாபம் கிடைத்திருக்கும். எனவே கண்டிப்பாக இந்த அபராத தொகையை பாஸ்கர் ஜாதவுக்கு ரெஸ்டாரன்ட் வழங்க வேண்டும். மேலும் ஜாதவ் ரெஸ்டாரன்டுக்குள் சென்று அமர்ந்து சாப்பிடவில்லை, அங்கிருந்த கவுண்டரில் தான் ஐஸ்கிரீமை வாங்கி சென்றுள்ளார். எனவே ரெஸ்டாரன்டின் விளக்கத்தை ஏற்க முடியாது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.