மத்திய அரசு 4ம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி, செப்.7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பப்பட்டால், பாடம் நடத்தப்படலாம்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அடுத்தடுத்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் திறக்கப்படவில்லை. பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று(ஆக.29) 4வது ஊரடங்கு தளர்வுகளை (Unlock 4.0 in India) வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
கொரானா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் செப்டம்பர் 30ம் தேதி ஊரடங்கு அப்படியே நீடிக்கும். மற்ற இடங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அவை...
* செப்.7ம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதில் சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
* சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, மதரீதியான, அரசியல் நிகழ்வுகளுக்கு செப்.21ம் தேதி முதல் அனுமதிக்கப்படும். இவற்றில் அதிகபட்சம் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம். சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமிநாசினி, உடல்வெப்ப பரிசோதனை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பின்பற்ற வேண்டும்.
* திறந்தவெளி திரையரங்குகள், செப்.21ம் தேதி முதல் திறக்கப்படலாம்.
* மாநில அரசுகளுடன் கலந்தாலோசனைக்கு பிறகு, பள்ளிகள், கல்லூரிகள், கல்விநிறுவனங்கள் செப்.30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஆன்லைன், தொலைதூரக் கல்வி ஊக்குவிக்கப்படும்.
* ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 50 சதவீதம் பேர் பணிக்கு வரலாம். அவர்கள் ஆன்லைன் கல்வி உள்ளிட்ட இதரப் பணிகளை மேற்கொள்ளலாம்.
* 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம். அவர்களின் பெற்றோரிடம் இருந்து அனுமதிக் கடிதம் பெற வேண்டும். அப்படி விருப்பப்பட்டு வரும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கலாம்.
* உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டம் மற்றும் பிஎச்டி படிப்பவர்கள், ஆய்வுக்கூடம் உள்ளிட்ட வசதிகளுக்காக அனுமதிக்கப்படலாம். ஐடிஐ உள்ளிட்ட தொழில் நிறுவனங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படலாம்.
அதே சமயம், சினிமா தியேட்டர்கள், நீச்சல்குளங்கள் மற்றும் கூட்டம் கூடும் இடங்கள் அனைத்தும் செப்.30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.