மலையாளிகளின் முக்கிய பண்டிகையான திருவோணத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. நேற்று சிறப்புப் பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று காலை நடை திறக்கப்பட்டு கோவில் முன் அத்திப்பூ கோலம் இடப்பட்டது. கோவில் ஊழியர்கள் இந்த பிரமாண்ட பூக்கோலத்தை இட்டனர்.
இதன்பின்னர் சபரிமலை கோவில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி சார்பில் ஓண சத்யா என்ற ஓண விருந்து பரிமாறப்பட்டது. முதலில் சுவாமிக்கு ஓண சத்யா படைக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு இதைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் கோவில் ஊழியர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. வழக்கமாக ஓணம் சிறப்புப் பூஜைகளுக்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் 4 நாட்கள் வரை இந்த ஓண விருந்து வழங்கப்படும்.
ஆனால் தற்போது பக்தர்கள் யாரும் சபரிமலையில் அனுமதிக்கப்படாததால் இன்றும், நாளையும் மட்டுமே இந்த ஓண விருந்து வழங்கப்படுகிறது. நாளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஊழியர்கள் சார்பில் ஓண விருந்து வழங்கப்படுகிறது. ஓணம் சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னர் செப்டம்பர் 2ம் தேதி இரவு சபரிமலை கோவில் நடை சாத்தப்படும்.