பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் டோமி தாமஸ். இவரது மனைவி நிமிஷா பிரியா(35). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. நர்சிங் முடித்துள்ள இவர் ஊரில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஏமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. இதையடுத்து நிமிஷா பிரியா கடந்த 10 வருடங்களுக்கு முன் ஏமனுக்குச் சென்றார். அங்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த போது அங்கேயே ஒரு சிறிய கிளினிக் தொடங்கும் ஆவல் நிமிஷாவுக்கு ஏற்பட்டது. ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஏமனில் சொந்தமாகத் தொழில் எதுவும் தொடங்க முடியாது.
இதையடுத்து அவர் அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்து முஹ்தி என்பவரைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறினார். ஏமன் நாட்டுச் சட்டத்தின்படி அந்த நாட்டை சேர்ந்த ஒருவரின் முதலீடும் இருந்தால் மட்டுமே வேறு நாட்டினர் அங்குத் தொழில் நடத்த முடியும். இதையடுத்து தலாலின் பங்குடன் நிமிஷா அங்கு ஒரு கிளினிக்கை தொடங்கினார். இந்நிலையில் நிமிஷாவை தலால் மிரட்டி திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவரை கொடுமைப்படுத்தியும் வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டையும், பல லட்சம் பணத்தையும் தலால் பறித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ல் வீட்டில் வைத்து நிமிஷாவுக்கும், தலாலுக்கும் பயங்கர தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நிமிஷா, தலாலை கத்தியால் குத்திக் கொன்றார். பின்னர் அவரது உடலை வாட்டர் டேங்கில் போட்டு மூடினார்.
இது குறித்து அறிந்த போலீசார் நிமிஷாவையும், அவருக்கு உதவியாக இருந்த ஹனானா என்ற நர்சையும் கைது செய்தனர். இந்த வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த வருடம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஏமன் நாட்டுச் சட்டத்தின் படி அங்கு ஒருவர் கொலை செய்யப்பட்டால், கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் கேட்கும் தொகையைக் கொடுத்தால் வழக்கிலிருந்து விடுதலையாகி விடலாம். இதையடுத்து கொல்லப்பட்ட தலாலின் குடும்பத்தினருடன் நிமிஷாவின் சார்பில் ஆஜராகும் வக்கீல் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ₹70 லட்சம் கொடுத்தால் வழக்கிலிருந்து விடுவிக்க உதவுவதாக அவர்கள் கூறினர். இதற்கிடையே நீதிமன்றத்தில் நிமிஷா சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிமிஷாவின் தீர்ப்பை அமல்படுத்துவதை நீட்டி வைக்க வேண்டும் என்றும், அவர் நிரபராதி என நிரூபிக்க மேலும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தலால் பல கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த மனுவை ஏமன் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு நிமிஷாவின் தண்டனையை மறு உத்தரவு வரும் வரை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.