2016ஆம் ஆண்டு 'கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்' படத்தில் மார்வல் சூப்பர்ஹீரோ பிளக் பேந்தராக புகழ்பெற்ற சாட்விக் போஸ்மன் சமீபத்தில் மறைந்தார். 43 வயதே நிரம்பிய அவர் பெருங்குடல் புற்றுநோயினால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்நோய்ப் பாதிப்பு இருப்பது 2016ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் நோயோடு போராடிய அவர், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தம் இல்லத்தில் உயிர் துறந்தார்.
பெருங்குடல் புற்றுநோய்
உணவு குழலின் கடைசிப் பகுதி பெருங்குடல். இதில் தோன்றும் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. பெருங்குடலில் புற்றுநோய் செல் அல்லாத சிறுகூட்டமான செல்கள் உருவாகும். அவை பாலிப்ஸ் என்று அழைக்கப்படும். இந்த பாலிப்ஸ் செல்கள் பெருங்குடல் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. சிலருக்கு மலக்குடலில் ஆரம்பிப்பதால் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் என்றும் இது கூறப்படுகிறது.
பாலிப்ஸ் என்னும் சிறு கூட்ட செல்கள் மிகவும் சிறியவையாக இருக்கும். வெகு சில அறிகுறிகளையே அவை காட்டும். ஆகவே, பாலிப்ஸ் இருப்பதாகக் கண்டறியப்பட்டால், புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.
நோய் அறிகுறிகள்
பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்பக் கட்டத்தில் எந்த அறிகுறியும் தெரியாது. புற்றுநோயின் அளவு, குடலில் அது இருக்கும் பகுதி ஆகியவற்றைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.மலம் கழிப்பதில் பிரச்சனை, மலத்தின் தன்மையில் காணப்படும் மாற்றம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலத்தில் இரத்தம், மலக்குடலில் இரத்தக் கசிவு, வாய்வு தொல்லை, வலி மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற அடிவயிற்றுப் பகுதியில் அடிக்கடி பிரச்சனை, முழுவதுமாக மலம் கழிக்காதது போன்ற உணர்வு, காரணம் தெரியாத உடல் எடை குறைவு, அசரி, பலவீனம் ஆகியவை பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
காரணங்கள்
பெருங்குடல் புற்றுநோய் உருவாவதற்கான காரணங்கள் இன்னும் அறுதியிடப்படவில்லை. பெருங்குடலிலுள்ள ஆரோக்கியமான செல்கள் தங்கள் மரபணுவில் (டிஎன்ஏ) மாற்றமடையும் நோய் தோன்றுகிறது. உடலிலுள்ள ஆரோக்கியமான செல்கள் வளர்ச்சி பெற்று சமமாகப் பிரியும். ஆனால் செல்லிலுள்ள மரபணு சேதமுறும்போது அது புற்றுநோயாக மாறுகிறது. செல்கள் பிரிக்கப்படாத நிலையிலும் பிரிதல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த செல்கள் தேங்கி, புற்றுநோய் கட்டி உருவாகிறது. ஆரோக்கியமான செற்களைப் புற்றுநோய் செல்கள் அழிக்கின்றன. இந்தப் புற்றுநோய் செல்கள் உடலில் மற்ற பாகங்களுக்கும் பரவக்கூடும்.
யாருக்கு வரக்கூடும்?
எந்த வயதினருக்கும் பெருங்குடல் புற்றுநோய் வரக்கூடும் என்றாலும் பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் அபாய பிரிவினராவர். ஐம்பது வயதுக்குக் குறைவானோருக்கும் இந்நோய் வருவதன் காரணம் இன்னும் சரியாகக் கண்டறியப்படவில்லை. ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற இனத்தவரைக் காட்டிலும் இந்நோயால் தாக்கப்படும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
குடல் அழற்சி உள்ளிட்ட குடல் பாதிப்பை உருவாக்கும் நோய்களைப் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இரத்த சம்மந்தமான உறவினர்களுக்கு இந்நோய்ப் பாதிப்பு இருக்குமானால் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
மேற்கத்திய உணவு முறையும் பெருங்குடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்க்குக் காரணமாகிறது.
நார்ச்சத்து மிகக்குறைவான, கொழுப்பு அதிகமான உணவுகளை உண்போர், பண்ணையில் வளரும் கால்நடைகளின் இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடுவோருக்கும் இதன் அபாயம் அதிகம்.அதிக உடலுழைப்பில்லாத வாழ்வியல் முறை கொண்டவர்கள், இன்சுலினை செயல்பாட்டுக்கு எதிரான உடல் கொண்ட நீரிழிவு பாதிப்புள்ளோர், உடல் பருமன் கொண்டோருக்கும் அதிகமாகப் புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்கள் கொண்டோருக்கும் பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு உள்ளது.
பாதுகாப்பு
இரத்த சம்மந்தமான உறவினர்களுக்குப் பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பிருப்பவர்கள் ஐம்பது வயதுக்கு மேல் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வாழ்வியல் முறையினை சுறுசுறுப்பானதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
முழு தானியங்கள், அதிகமாகப் பழங்கள், காய்கறிகள் சாப்பிடவேண்டும். அதிகமாக புகை பிடித்தல், மது அருந்துதலைத் தவிர்க்கவேண்டும். உடலுழைப்பில் ஈடுபடுதல் அல்லது உடற்பயிற்சி செய்வதன் மூலம் சுறுசுறுப்பாகச் செயல்படவேண்டும்.