திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள வெம்பாயம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மிதிலாஜ் (32), ஹக் முகமது (28). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இவர்களும், இவர்களது நண்பரான ஷஹின் என்பவரும் ஒரே பைக்கில் தேம்பான்மூடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. அவர்களைப் பார்த்துப் பயந்த ஷஹின் தப்பி ஓடினார்.மற்ற இருவரையும் அக்கும்பல் சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே மிதிலாஜ் பலியானார். சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அப்பகுதியினர் ஹக் முகம்மதை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் திருவனந்தபுரம் மாவட்ட எஸ்பி அசோகன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். இந்த இரட்டை கொலைக்கு அரசியல் விரோதம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த 1 வருடத்திற்கு மேலாக அப்பகுதியில் இளைஞர் காங்கிரசாருக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. இதுதான் இந்த இரட்டைக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த இரட்டை கொலைக்கு இளைஞர் காங்கிரஸ் தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூறியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இரட்டைக் கொலையைக் கண்டித்து கேரளா முழுவதும் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருப்பு நாளாக கடைப்பிடித்து வருகிறது. கேரளா முழுவதும் இந்த அமைப்பு போராட்டங்களும் நடத்தி வருகின்றன. இந்த கொலைக்குப் பதிலடியாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் திருவனந்தபுரத்தில் பல்வேறு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.