உலகில் முதல் நாடக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மனிதர்கள்மீது மருந்தைப் பரிசோதித்து இரண்டு மாதங்களுக்குள் இந்த தடுப்பு மருந்துக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது என்று கூறப்பட்டது. இந்தத் தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில், கடும் சந்தேகங்களை ஏற்படுத்தியது. முறையான சோதனைகளைச் செய்யாமல், மருந்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதற்கிடையே, ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் இந்த போக்கை எடுத்துள்ளது. 3 அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கி உள்ள தடுப்பூசிகளுக்கு, 3-ம் கட்ட பரிசோதனைக்கு முன்பே அனுமதி கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
``தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம், 3-ம் கட்ட பரிசோதனையின் முடிவுக்கு முன்பே அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தால், நாங்கள் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றாமல் உடனடியாக அங்கீகாரம் கொடுப்போம். இதுபோன்ற சுகாதார அவசரநிலையின்போது, ஆபத்தை விடப் பயன்கள் அதிகமாக இருப்பது தெரியவந்தால், உடனடி அங்கீகாரம் சாத்தியம் தான். அப்படிக் கொடுக்கும் அங்கீகாரம் அறிவியல் மற்றும் மருத்துவம் அடிப்படையில் மட்டுமே இருக்கும்" என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தலைவர் ஸ்டீபன் ஹன் கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக அமெரிக்கா உருவாக்கும் தடுப்பூசிக்கு நவம்பர் 3-ந் தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே அங்கீகாரம் அளிக்கப்படும் என்று ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் டிரம்ப்பை திருப்திப்படுத்துவதற்காக இப்படி அவசர முடிவுகள் எடுக்கப்படுவதாகச் சர்ச்சை கிளம்பியுள்ளது.