முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடந்த 10ம் தேதியன்று டெல்லி ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் இருந்து வந்த திரு.பிரணாப் முகர்ஜி, சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் மரணம் அடைந்தார்.
நாட்டின் 13வது குடியரசுத் தலைவராகத் திரு.பிரணாப் முகர்ஜி, கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பதவி வகித்தவர். மேலும், மத்தியில் நிதி, பாதுகாப்பு, வர்த்தகம், வெளியுறவுத் துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர். அவரது மறைவை அடுத்து வரும் 6ம் தேதி வரை ஏழு நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர், இன்று பிற்பகல் 2 மணியளவில் பிரணாப் முகர்ஜியின் உடல், அவரது இல்லத்தில் இருந்து வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. லோதி இடுகாட்டில் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித்முகர்ஜி, இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். பின்னர், பிரணாப் உடல் தகனம் செய்யப்பட்டது.