திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே உள்ள சவுக்கா என்ற இடத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்குக் கோழிகளை வளர்ப்பது என்றால் அலாதிப் பிரியம். வீட்டில் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பிறந்த ஒரு கோழிக்குஞ்சுக்கு நான்கு கால்கள் இருந்ததைப் பார்த்து வீட்டினர் ஆச்சரியமடைந்தனர்.
இதுகுறித்து ஜார்ஜ் கூறியது: தற்செயலாகத் தான் அந்த குஞ்சுக்கு நான்கு கால்கள் இருப்பதைக் கவனித்தேன். கூடுதலாக இருக்கும் கால்களால் அந்த குஞ்சுக்கு ஏதாவது சிரமம் ஏற்படலாம் என முதலில் கருதினோம். ஆனால் எந்த சிரமமும் இல்லாமல் மற்ற குஞ்சுகளைப் போலவே ஓடியாடி விளையாடி வருகிறது. மிகவும் அபூர்வ கோழிக்குஞ்சு என்பதால் காக்காவோ, பருந்தோ கொத்திச் செல்லாமல் இருப்பதற்காக நாங்கள் அதைப் பாதுகாப்புடன் கண்காணித்து வருகிறோம் என்று கூறினார். இது குறித்து கால்நடை பாதுகாப்புத் துறையினர் கூறுகையில், கோழிக்குஞ்சுகளுக்கு இதுபோல நான்கு கால்கள் இருப்பது அபூர்வமாகக் காணப்படும் ஒன்றாகும் என்றனர். இந்த அதிசய நாலுகால் கோழிக் குஞ்சை பார்க்க தினமும் ஜார்ஜின் வீட்டுக்கு ஏராளமானோர் செல்கின்றனர்.