இந்தியாவில் கொரோனா நோய் பாதித்து உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், உயிரிழப்பில் 69 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அதிகபட்சமாக, அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இந்தியா உள்ளது. அமெரிக்காவில் 62 லட்சம் பேரும், பிரேசிலில் 39 லட்சம் பேரும், இந்தியாவில் 37 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் நேற்று வரை கொரோனாவுக்கு 65,288 பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில், கொரோனா உயிரிழப்பு குறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். கடந்த ஆக.22ம் தேதி வரையான கொரோனா உயிரிழப்புகளில் 90 சதவீதம் பேர், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மேலும், பலியானவர்களில் 69 சதவீதம் பேர் ஆண்கள். கொரோனாவுக்கு ஆக.22 வரை 56,292 பேர் பலியாகியுள்ளனர். அதில் 50 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று பார்த்தால் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். அதே போல், 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் பாதித்தால், அதில் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆக.22ம் தேதி வரை கொரோனாவுக்கு பெண்கள் 17,315 பேரும், ஆண்கள் 38,973 பேரும் பலியாகியுள்ளனர். 11 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட 599 பேர் பலியாகியுள்ளனர். இதில் பாதிப் பேர் பெண்குழந்தைகள் என்றும் தெரியவந்திருக்கிறது. ஆக.22ம் தேதி வரையான பலிகளில் 90 வயதுக்கு மேற்பட்ட 301 பேரும் அடங்குவர்.
உலக அளவில் கொரோனா இறப்பு விகிதம் 3.3 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இது 1.77 சதவீதமாக உள்ளது.