திருவனந்தபுரம் பேட்டை அருகே உள்ள வாழவிளா பகுதியைச் சேர்ந்தவர் சுஜித். இவருக்கு 13 வயதில் கவுரி நந்தனா என்ற ஒரே ஒரு மகள் உண்டு. படிப்பில் சுட்டியான இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் வீட்டில் இருந்துதான் இவர் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொண்டு படித்து வருகிறார். கவுரியின் தந்தை சுஜித் ஒரு கிரிமினல் வழக்கு தொடர்பாகப் பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டருக்கு எதிராக உயர் அதிகாரிகளுக்கு ஒரு புகார் கொடுத்தார்.
இதன் பின்னர் தான் கவுரிக்கு பிரச்சினை ஏற்படத் தொடங்கியது. போலீசாரும், போலீசார் ஏவிய ரவுடிகளும் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரச்சினை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்து கவுரியால் ஒழுங்காகப் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொறுத்துப் பொறுத்து பார்த்த அவர், கடைசியில் பிரதமருக்கு இமெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் கூறியிருப்பது: எனது தந்தைக்கும், பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையே ஒரு வழக்கு தொடர்பாகப் பிரச்சனை இருந்து வருகிறது. சப் இன்ஸ்பெக்டர் அடிக்கடி எனது தந்தைக்குத் தொல்லை கொடுத்து வந்ததால் அவருக்கெதிராக எனது தந்தை உயர் அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சப் இன்ஸ்பெக்டர் ரவுடிகளை ஏவி எங்களது குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்து வருகிறார். அடிக்கடி ரவுடிகள் எனது வீட்டுக்கு வந்து ரகளை செய்கின்றனர். போலீசார் எனது தந்தை மற்றும் தாய்க்கு எதிராகப் பொய்யான கிரிமினல் வழக்குப் பதிவு செய்து வீட்டில் அடிக்கடி சோதனை என்ற பெயரில் மிரட்டி வருகின்றனர். இதனால் என்னால் ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பிரதமருக்கு அனுப்பிய அந்த கடிதத்தில் கவுரி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் உதவி கமிஷனர் ஐஸ்வர்யா கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், கூடுதல் விவரங்களை எதுவும் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.