கீரியிடம் சிக்கிய நல்ல பாம்பு கடைசியில் பாம்பின் உயிரை காப்பாற்றியது யார் தெரியுமா?

by Nishanth, Sep 3, 2020, 16:29 PM IST

அடிக்கடி சண்டை போடுபவர்களைப் பார்த்தால் நாம் இப்படிக் கூறுவது உண்டு...'இவங்க எப்போது பார்த்தாலும் கீரியும் பாம்பும் போல மோதிக்கொள்கிறார்களே என்று.....'கீரியிடம் பாம்பு சிக்கினால் அதன் என்ன ஆகும் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் கீரியிடம் சிக்கிய ஒரு நல்ல பாம்பின் உயிரைக் காப்பாற்றியது யார் என்று தெரிந்தால் நீங்கள் அதிசயித்து விடுவீர்கள். சமூக இணையதளங்களில் இப்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை ஐஎப்எஸ் அதிகாரியான சுஷாந்தா நந்தா என்பவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். ஒரு செம்மண் பாதையின் நடுவில் கீரிக்கும், ஒரு நல்ல பாம்புக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

பாம்பு திரும்பும் இடமெல்லாம் சென்று அந்த கீரி சீறிப்பாய்ந்து சென்று கடிக்கிறது. எவ்வளவு முயன்றும் அந்த நல்ல பாம்பால் கீரியிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. வளைத்து வளைத்து பாம்பின் மீது அந்தக் கீரி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. இந்த சமயத்தில்தான் யாரும் எதிர்பாராத வகையில் சம்பவத்தில் ஒரு டுவிஸ்ட் ஏற்பட்டது. திடீரென எங்கிருந்தோ வந்த ஒரு காட்டுப் பன்றி கூட்டம் அந்த காட்சியைப் பார்த்தது. உடனடியாக ஒரு காட்டுப்பன்றி அந்தக் கீரியை விரட்டியது. ஆனால் சிறிது தூரம் ஓடிய அந்த கீரி மீண்டும் திரும்பி வந்து பாம்பைக் கடிக்கப் பாய்ந்தது.

இதைப் பார்த்த அந்த பன்றி மீண்டும் ஓடி வந்து கீரியை விரட்டியது. அதன் பிறகும் கீரி அங்கிருந்து செல்லாததால் பன்றிக் கூட்டமே திரண்டு வந்து கீரியை விரட்டியது. இதன்பிறகே அந்தக் கீரி அங்கிருந்து ஓடியது. பின்னர் அந்த நல்ல பாம்பு நிம்மதியாக அந்த இடத்தை விட்டுச் சென்றது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து சுஷாந்தா நந்தா குறிப்பிடவில்லை.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை