கொரோனா பலரது வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. ஏராளமானோர் தாங்கள் இதுவரை செய்து வந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் கொரோனாவால் கிடைத்த ஓய்வு நேரத்தை வீணடிக்க விரும்பாத ஒரு பிரபல மலையாள இசையமைப்பாளர் தச்சு தொழிலாளியாக மாறியுள்ளார். 1983ல் மலையாள சினிமாவில் 'ஈனம்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக கால் பதித்த அவுசேப்பச்சன் தான் கொரோனா காலத்தில் ஒரு தச்சு தொழிலாளியாக மாறியுள்ளார்.
'காதோடு காதோரம்', 'சிலம்பு', 'ஜனவரி ஒரு ஓர்மா' உட்பட 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் இசையமைத்து ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
இவரது வீடு திருச்சூரில் உள்ளது. கொரோனா காரணமாக வேறு எங்கும் செல்ல முடியாததால் வீட்டில் இருந்து மேஜை, நாற்காலிகளை செய்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில் மேஜை மற்றும் சமையறைக்கு தேவையான செல்ஃபுகள் ஆகியவற்றை தன்னந்தனியாக செய்து முடித்துள்ளார். தச்சுப்பணி செய்யும் வீடியோவை இவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். என்னுடைய இந்த முயற்சி யாருக்காவது ஊக்கமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற கடினமான வேலைகளை செய்தால் வயலின் வாசிக்க சிரமமாக இருக்கும் என்று எனது வீட்டினர் பயம் காட்டினர். ஆனால் இப்போது முன்பை விட சிறப்பாக என்னால் வயலின் வாசிக்க முடிகிறது என்று அவுசேப்பசன் கூறுகிறார்.