ஆந்திராவில் அதிகாலையில் கோயில் தேர் தீப்பற்றியது.. நாசவேலையா.. மக்கள் பீதி..

by எஸ். எம். கணபதி, Sep 6, 2020, 09:33 AM IST

ஆந்திராவில் இன்று(செப்.6) அதிகாலை கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தேர் தீப்பிடித்து எரிந்தது. தேர் கருகி முற்றிலும் நாசமானது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சாக்கிநெட்டிபள்ளி என்ற ஊர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீஅந்தர்வேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட மிகவும் பழமையான பெரிய தேர் இருந்து வந்தது.
இந்த தேரை கோயில் வளாகத்தில் உள்ள அதற்கான ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தேர் தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்படவே அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் முன்பாக தேர் முழுவதுமாக எரிந்து கரிக்கட்டையாகி விட்டது. மின்சாரக் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேண்டுமென்றே யாராவது தேருக்கு தீ வைத்தார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இந்நிலையில், கோயில் தேர் எரிந்ததால், ஊருக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்று மக்கள் பீதியடைந்துள்ளனர். கோயிலில் பரிகார பூஜைகள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


More India News

அதிகம் படித்தவை