நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் இப்போது நிரம்பி வழிகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட சிறை கைதிகளின் கணக்கு விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டின் கணக்கின்படி இந்தியச் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை கொள்ளளவை விட 18.5 சதவீதம் அதிகமாகும். இந்தியாவில் உள்ள சிறைகளில் தற்போதைய வசதிகளின்படி 4,03,700 பேரை மட்டுமே அடைக்க முடியும். ஆனால் 4,78,600 பேர்அடைக்கப்பட்டுள்ளனர். இது 2019 டிசம்பர் 31 வரை உள்ள கணக்கு மட்டுமே ஆகும். 2020 பிறந்து 8 மாதங்கள் கடந்துவிட்டன. இந்த 8 மாதங்களில் மேலும் பல ஆயிரம் கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 2010ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கணக்கைப் பார்க்கும்போது 2018ல் கைதிகளின் எண்ணிக்கை கொள்ளளவை விட 18 சதவீதம் அதிகமாக இருந்தது. 2019ல் இது 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. டெல்லி சிறைகளில் தான் கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. டெல்லி சிறைகளில் அதிகபட்சமாக 10 ஆயிரம் பேரை மட்டுமே அடைக்க முடியும். ஆனால் அங்கு 17,500 கைதிகள் உள்ளனர். அதாவது 175 சதவீதம் அதிகம். உத்தரப்பிரதேசத்தில் இது 168 சதவீதமாகவும், உத்தராகண்டில் 159 சதவீதமாகவும் உள்ளது. நமது நாட்டில் கொரோனா வேகமாகப் பரவி வரும் இந்த சூழ்நிலையில் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் சிறைகளில் கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொரோனா பரவி வருகிறது.
சிறைகளில் உள்ள 8 கைதிகளில் ஒருவர் 50 வயதுக்கு மேல் ஆனவர் ஆவார். 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு அதிகமாகும். இவர்களுக்கு வேறு பல நோய்கள் இருந்தால் நோயின் பரவும் வாய்ப்பு மிக அதிகமாகும். இது குறித்து சட்ட ஆலோசனை குழு உறுப்பினரான நேகா சிங்கால் கூறியது: நாட்டில் சிறைச்சாலைகள் முழுவதும் நிரம்பி வழிகின்றன. தற்போதைய சூழ்நிலையில் கைதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மிக அவசியமாகும். சிறைகளில் கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்றுவதும் சிரமமான காரியமாகும். கைதிகளைத் தினமும் விசாரணைக்காக வெளியே அழைத்துச் சென்று வருகின்றனர். தினமும் இதுபோல 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக வெளியே கொண்டு செல்லப்படுகின்றனர். வெளியே சென்று வரும்போது நோய் பரவும் ஆபத்து உள்ளது. இது தொடர்பாக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறிய குற்றங்கள் செய்து விசாரணைக்காகக் காத்துக் கிடப்பவர்கள் மற்றும் ஜாமீனோ, பரோலோ கிடைக்காதவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து நெரிசலைக் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்போதைய சூழ்நிலையில் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.