கேரளாவில் இரவு நேரங்களில் பெண்களை தனியாக ஆம்புலன்சில் கொண்டு செல்ல தடை

by Nishanth, Sep 7, 2020, 17:30 PM IST

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே நேற்று முன்தினம் இரவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது அதன் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து கேரளாவில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொடூர சம்பவத்திற்குப் பொறுப்பேற்று சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. கேரளாவில் பல பகுதிகளில் அமைச்சர் சைலஜாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

இந்த சம்பவம் கேரளாவுக்கு பெரும் அவமானம் என்று பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் கூறினார். கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு கிரிமினலை ஆம்புலன்ஸ் டிரைவராக எப்படி நியமிக்கலாம் என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், இரவு நேரங்களில் ஆம்புலன்சில் பெண்களைத் தனியாக அழைத்துச் செல்லக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்குப் பின்னர் அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே பெண்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அப்போது சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆம்புலன்சில் இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :

More India News