காஷ்மீர் காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர், 74 வயதான சையது சலாவுதீன். காஷ்மீரின் பத்காம் பகுதியை சேர்ந்த இவர் காவல்துறையில் பணியாற்றிய போது ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இணைந்து அதிர்ச்சியூட்டினார். தற்போது ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தலைவரும் அவரே. கூடவே, ஐக்கிய ஜிகாத் கவுன்சிலின் தலைவராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய தீவிரவாத அமைப்பின் தலைவரான பின், காஷ்மீர் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு சையது சலாவுதீன் மூலச் செயல்களே காரணம். இதனால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்திருக்கும் சையதை அமெரிக்க அரசாங்கம் சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் சையது குறித்து தற்போது, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வெளியிட்டுள்ள ரகசிய குறிப்பு ஒன்று வெளியே கசிந்துள்ளது. அதில், "சையது சலாவுதீன் காரை தேவையின்றி தடுத்து நிறுத்தக் கூடாது. அவர் ஐஎஸ்ஐ ஊழியர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரகசிய குறிப்பு, பாகிஸ்தானின் அனைத்து பாதுகாப்புப் படை பிரிவுகளுக்கும் ஐஎஸ்ஐ அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சையது பாகிஸ்தானில் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இவர் விவகாரம் குறித்து, வரும் 14ம் தேதி நடைபெறும் எப்ஏடிஎப் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அது பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.