மம்மூட்டிக்கு இன்று 69

by Nishanth, Sep 7, 2020, 19:16 PM IST

மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில். கடந்த 1979ல் பிரபல டைரக்டர் கே.எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளியான 'அனுபவங்கள் பாளிச்சகள்' என்ற படத்தில் படகோட்டியாக மிகச்சிறிய வேடத்தில் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்படப் பல மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து முடித்துள்ளார். 'டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர்', 'விதேயன்', 'ஒரு வடக்கன் வீரகதா' ஆகிய மூன்று படங்களுக்காக இவருக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

எந்த மொழியில் நடித்தாலும் இவர் தனது சொந்த குரலில் தான் டப்பிங் பேசுவார் என்பது இவரது சிறப்பம்சமாகும். மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மோகன்லாலுடன் இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் மம்மூட்டி இன்று தனது 69 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு மலையாள சினிமா உலகமே திரண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மம்மூட்டி தனது பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு படம் சமூக இணையதளங்களில் வைரலானது.

69 வயதிலும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அந்த படத்தைப் பார்த்து மூக்கின் மேல் விரல் வைக்காதவர்களே யாரும் இல்லை என்று கூறலாம். மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்து மோகன்லால் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடந்த 25 வருடங்களுக்கு முன் வெளிவந்த ' நம்பர் 20 மெட்ராஸ் மெயில்' என்ற படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தனர். அந்தப் படத்தில் மம்மூட்டி சூப்பர் ஸ்டார் நடிகராகவே வருவார். அதில் ஒரு காட்சியில், மம்மூட்டிக்கு மோகன்லால் முத்தம் கொடுப்பார். அந்தப் படத்தை மோகன்லால் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை