மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இவரது வீட்டுக்கு தொலைபேசியில் பேசிய ஒருவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் போனை எடுத்த ஆப்பரேட்டர், விவரத்தை கேட்டபோது, துபாயிலிருந்து பேசுவதாகவும், தான் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி என்றும், இன்னும் ஒருசில தினங்களில் முதல்வரின் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம் என்றும் கூறினார்.
இதையடுத்து உத்தவ் தாக்கரேவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இதுவரை போலீஸ் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரின் வீட்டுக்கும், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் வீட்டுக்கும் மிரட்டல் போன் வந்தது. அடுத்தடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் வந்தது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மூன்று பேருக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போன் எந்த நாட்டில் இருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.