இந்தியே தெரியாத தனக்கு இந்தி பிரிவில் வேலை.. குமுறும் மத்திய அரசு அதிகாரி!

by Sasitharan, Sep 7, 2020, 20:18 PM IST

இந்தி திணிப்பு தமிழகத்தில் மீண்டும் சர்ச்சை ஆகி வருகிறது. கனிமொழி எம்பியை விமான நிலைய ஊழியர் ஒருவர் `இந்தி தெரியாதது குறித்து பேச அது சர்ச்சையானது. அடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இந்தி தெரியாததால் தான் மோசமாக நடத்தப்பட்ட அவலங்களை பதிவு செய்தார். மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமில் இந்தியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டது மட்டுமின்றி, அதைத் தட்டிக் கேட்ட தமிழக மருத்துவர்களை மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா, `இந்தி தெரியாதவர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள்' என்று கூறி அவமானப்படுத்தினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு செய்வதாக ஜிஎஸ்டி அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் பரபரப்பு குற்றம் சாட்டியிருக்கிறார். ``இந்தியே தெரியாத தனக்கு இந்தி பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு துளிகூட விருப்பமில்லை. என்னைப் போன்று இந்தி பிரிவில் உள்ள 3 அதிகாரிகளும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். அவர்களுக்கும் இந்தி தெரியாது. இதனால், அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால் புரியாமல் கையெழுத்திடும் நிலை ஏற்படுகிறது. எங்களை போன்றோர்களிடம், மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிப்பு செய்கின்றனர்" என்ற புது குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


More India News

அதிகம் படித்தவை