இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. முதலில் தினமும் 100க்குள் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை பின்னர் ஆயிரத்தையும், 2 ஆயிரத்தையும் தாண்டி கடந்த இரு தினங்களுக்கு முன் 3 ஆயிரத்தையும் கடந்தது. தினமும் சராசரியாக 10 பேர் மரணம் அடைந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் கோழிக்கோட்டில் விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிடுதற்காக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் சென்றனர். அப்போது அவர்களுடன் அங்கு இருந்த மலப்புரம் மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷணன், எஸ்பி, உதவி கலெக்டர், கூடுதல் எஸ்பி உட்பட 20க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகள் 14 நாள் சுய தனிமைக்குச் சென்றனர். அப்போது முதல்வரும், அமைச்சர்களும் தங்களது வீடுகளிலிருந்து தான் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் 5 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் அமைச்சர் தாமஸ் ஐசக்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் சுய தனிமைக்குச் சென்றுள்ளனர். கேரளாவில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தனிமையில் சென்றதால் இந்த வாரத்திற்குப் பதிலாக 16ம்தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.