ஐசிஐசிஐ வங்கி மோசடி.. தீபக் கோச்சார் கைது.. மும்பை கோர்ட்டில் ஆஜர்..

by எஸ். எம். கணபதி, Sep 8, 2020, 14:10 PM IST

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கோச்சாரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகச் சந்தா கோச்சார் பணியாற்றினார். இவரது கணவர் தீபக் கோச்சார், தொழிலதிபர். இந்நிலையில், வீடியோகான் உள்பட 6 நிறுவனங்களுக்கு முறைகேடாக ரூ.1,875 கோடி கடன் வழங்கியதாகச் சந்தா கோச்சார் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதிலும், வீடியோகான் நிறுவனத்திற்குக் கடன் வழங்கியதன் மூலம், தீபக் கோச்சார் பலன் அடைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. எனினும், அதை வங்கியின் தலைவர் மகேந்திரசர்மா மறுத்து வந்தார்.

இதன்பின், சந்தா கோச்சார் பதவி விலகினார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர் விதிகளை மீறி கடன் வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, சந்தா கோச்சார், தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையினர் நிதிமோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சந்தாகோச்சார் மற்றும் தீபக் கோச்சாருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தி, ரூ.78 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்நிலையில், பணபரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தீபக் கோச்சார் மற்றும் சந்தா கோச்சாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவில் தீபக் கோச்சாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தீபக் கோச்சார் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், கைது செய்யப்பட்டதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தீபக் கோச்சாரை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.


More India News