சட்டசபை கூட்டத்தை 7 நாட்களாவது நடத்துங்க.. துரைமுருகன் வலியுறுத்தல்

by எஸ். எம். கணபதி, Sep 8, 2020, 12:51 PM IST

தமிழக சட்டசபை வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை 7 நாட்களாவது நடத்த வேண்டுமென்று துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் அவசரமாக முடிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சபையைக் கூட்ட வேண்டும் என்று விதி உள்ளது. இதனால், இம்மாதம் சில நாட்கள் சபையைக் கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஆனால், கோட்டை வளாகத்திற்குள் இட நெருக்கடி உள்ளதால் சமூக இடைவெளி பின்பற்றுவது சிரமம் என்று யோசிக்கப்பட்டது.இதையடுத்து, சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்காக, கலைவாணர் அரங்கத்தைச் சபாநாயகர் தனபால், பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர், செப்.14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் உள்ள மூன்றாவது தளத்தில் சட்டசபை கூடும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சட்டசபையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம், சபாநாயகர் தலைமையில் இன்று(செப்.8) காலையில் நடந்தது. இதில் 14, 15, 16ம் தேதிகளில் மட்டும் சபையைக் கூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. முதல் நாளன்று, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகா்ஜி, சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன், கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுப் பேரவை ஒத்திவைக்கப்படும். 15, 16ம் தேதிகளில் கூட்டத்தொடர் நடைபெறும். ஆனால், சபையைக் குறைந்தது 7 நாட்களாவது கூட்டி பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக வலியுறுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறியதாவது:பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டியுள்ளது. எனவே, சட்டசபையைக் குறைந்தது 7 நாட்களாவது கூட்ட வேண்டும். மாநில அரசுகளை மதிக்காமல், மத்திய அரசு தன்னிச்சையாக புதிய கல்வி கொள்கையைக் கொண்டு வருகிறது. அதே போல், தொடர்ந்து இந்தியைத் திணிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


More Tamilnadu News