கேரளாவில் விரைவில் மதுபார்களை திறக்க முடிவு

by Nishanth, Sep 8, 2020, 14:30 PM IST

கேரளாவில் மது பார்களை விரைவில் திறப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் மதுக் கடைகளைக் கேரள அரசின் மதுபான விற்பனைக் கழகம் நடத்தி வருகிறது. கேரளா முழுவதும் 350க்கும் மேற்பட்ட சில்லறை மது விற்பனை கடைகள் உள்ளன. கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் மதுக் கடைகளும், பார்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் நேரடியாகக் கடைகளுக்குச் சென்று மது வாங்க முடியாது.

இதற்காக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் முன்பதிவு செய்து குறிப்பிட்ட சமயத்தில் கடைக்குச் சென்று மது வாங்கிக் கொள்ளலாம். கடைகள் மட்டுமல்லாமல் பார்களிலும் மது விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பார்களை மூடியிருப்பதால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே பார்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் பார் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பார்களை திறப்பது குறித்து கேரள அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் விரைவில் கேரளாவில் மது பார்கள் திறக்கப்படும் எனக் கருதப்படுகிறது. கேரளா முழுவதும் 596 மது பார்களும், 350 பீர், ஒயின் பார்களும் உள்ளன.

READ MORE ABOUT :

More India News