ராணுவத் துறையில் முதலீடு.. பிரான்சுக்கு ராஜ்நாத் அழைப்பு.. விமானப்படையில் ரபேல் சேர்ப்பு..

by எஸ். எம். கணபதி, Sep 10, 2020, 14:47 PM IST

இந்தியாவின் ராணுவத் தளவாட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்ய வருமாறு பிரான்ஸ் நாட்டுக் குழுவினரிடம் ராஜ்நாத்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. இந்த போர் விமானங்களை முறைப்படி விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.

5 ரபேல் விமானங்களும், விமானப்படையின் கோல்டன் ஆரோஸ் எனப்படும் 17வது பிரிவில் இணைக்கப்பட்டன. அதற்கான சான்றைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விமானப்படையின் 17வது பிரிவு கமாண்டர் ஹர்கீரத்சிங்கிடம் வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் பாதுகாப்புத் துறை பெண் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கிறார். அவருக்கு ராஜ்நாத்சிங், நினைவுப்பரிசு வழங்கினார். முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதவுரியா மற்றும் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து, இந்தியா, பிரான்ஸ் நாட்டு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர், ராஜ்நாத்சிங் கூறுகையில், எல்லையில் பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், விமானப்படையில் ரபேல் விமானம் சேர்க்கப்பட்டிருப்பது முக்கிய தருணமாகும்.

இது உலகத்திற்கு உறுதியான செய்தியை அளிக்கும். குறிப்பாக, நமது இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுவோருக்கு எச்சரிக்கையாக அமையும். எல்லையில் சிறப்பாகச் செயல்பட்ட விமானப்படையினரைப் பாராட்டுகிறேன். இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவம் மற்றும் இதர துறைகளில் கூட்டுறவு தொடரும். இந்தியாவின் ராணுவத் தளவாட தொழில் பூங்காக்களில் பிரான்ஸ் நிறுவனங்களை முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.பிரான்ஸ் அமைச்சர் புளோரான்ஸ் பார்லி கூறுகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க பிரான்ஸ் ஆதரவு அளிக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பிரான்ஸ் உதவி புரியும். இந்தியத் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்த உதவும். இருநாடுகளுக்கு இடையே கடந்த 1998ம் ஆண்டு முதல் நீடிக்கும் தொழில் வர்த்தக உறவில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.


More India News

அதிகம் படித்தவை