விவசாயத்தை ஊக்குவிக்கவும், முன்னெடுப்பதற்கும், உரமூட்டுவதற்கும் பல விஷயங்கள் இருந்தாலும், அதில் முதன்மையானது விதை. " ஆடிப்பட்டம் தேடி விதை " என்ற பழமொழி விதையின் முக்கியத்துவத்தையும் , காலத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் .அனைத்து துறைகளிலும் டிஜிட்டல்மயமாக்கலைத் தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, விவசாயத் துறையிலும் பல்வேறு நடைமுறைகளை மிகவும் எளிமையாக்க முன்வந்துள்ளது.
இதன் ஒருபகுதியாக, விதைகளை ஆன்லைன் (Online) மூலம் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் சார்பில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் இந்தியாவின் முதல் ஆன்லைன் விதை போர்ட்ல் (Seed Portal) வசதியை வடிவமைத்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, 60 தோட்டக்கலைப் பயிர்களின் விதைகளை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் புக் செய்து வாங்கிக்கொள்ளலாம்.
எஸ்பிஐ வங்கியும் , மத்திய வேளாண் துறை அமைச்சகமும் இணைந்து யோனா கிரிஷி ஆஃப் எனும் ஆஃப் வெளியிட்டுள்ளது.விதைகளை ஆன்லைனில் பெறுவது மட்டுமல்லாமல், ஆன்லைனிலேயே விதைக்கான பணத்தையும் செலுத்திவிட முடியும். மேலும் விவசாயத்திற்கு அரசு வழங்கும் மானியம் மற்றும் சலுகைகளையும், பெற முடியும்.
இதில் தக்காளி, வெங்காயம், கத்திரி, பச்சைமிளகாய், ஹைபிரிட் பச்சைமிளகாய், தர்பூசணி, குடை மிளகாய், முள்ளங்கி, பட்டானி, பீன்ஸ், கீரைகள், கொத்தமல்லி உள்ளிட்டவற்றின் விதைகளை ஆன்லைனில் பெறலாம்.
இந்த டிஜிட்டல்மயமாக்கலின் மூலம் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.