பட வாய்ப்பு இல்லாவிட்டால் என்ன, கருவாடு விற்று பிழைப்பு நடத்தும் நடிகர்

by Nishanth, Sep 11, 2020, 13:18 PM IST

கேரளாவில் சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒரு நடிகர் கருவாடு வியாபாரத்தைத் தொடங்கியுள்ளார்.கொரோனாவால் அனைத்து துறைகளையும் போல சினிமா துறையிலும் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். நடிகர்கள், நடிகைகள் உட்பட திரைத்துறையைச் சேர்ந்த பலர் பிழைப்புக்காக வேறு தொழிலைத் தேடிச் சென்றுவிட்டனர். மலையாளத்தில் சிலர் லாட்டரி விற்றும், மீன் விற்பனை உட்படப் பல வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு நடிகர் சினிமா வாய்ப்பு இல்லாததால் கருவாடு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஆலப்புழாவைச் சேர்ந்த கோப்ரா ராஜேஷ் என்ற இந்த நடிகர் நிவின் பாலி நடித்து வெற்றிகரமாக ஓடிய ஆக்‌ஷன் ஹீரோ பிஜு என்ற படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் சிறப்பாகப் பேசப்பட்டது. அந்தப் படத்தில் போலீசின் வாக்கி டாக்கியை திருடி கோப்ரா காலிங் என்று அவர் பேசிய டயலாக் அனைவராலும் ரசிக்கப்பட்டது.இதன் பிறகு தான் இவரது பெயர் கோப்ரா ராஜேஷ் என ஆனது.

இந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதால் கோப்ரா ராஜேஷுக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைத்தன. சினிமாவுக்கு வருவதற்கு இவர் மிமிக்ரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். தற்போது கொரோனா காரணமாகப் பட வாய்ப்புகளும், கலைநிகழ்ச்சி வாய்ப்புகளும் இல்லாததால் இவர் வருமானம் இன்றி தவித்து வந்தார்.
இவரது நண்பர்கள் சிலர் கருவாடு வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோப்ரா ராஜேஷும் கருவாடு வியாபாரத்தைத் தொடங்கி உள்ளார். தினமும் கடற்கரையில் கருவாட்டைக் காயவைத்து அதை விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகிறார். சினிமா வாய்ப்பு இல்லாவிட்டால் என்ன, கருவாடு வியாபாரம் இப்போது நல்ல நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. பட வாய்ப்பு வரும் இதைத் தொடரவேண்டியது தான் என்கிறார் கோப்ரா ராஜேஷ்.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை