நீட் எனும் வல்லரக்கன்

NEET exam should be banned issues

ஒரே நாளில் மூன்று உயிர்களை எடுக்க ஒரு அரசின் கொள்கை சார்ந்த முடிவால் முடியுமெனில்,
நிகழ்ந்தவை தற்கொலைகள் அல்ல. அவை அரசு செய்த படுகொலைகள்.
நீட்டுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் கொடுக்கட்டும். இந்த நாடு முழுவதும் அவர்களுடன் தான் போராடிக் கொண்டு இருக்கிறது.
தங்களுடைய அபிமான அரசு எதை செய்தாலும், அதனால் தன் வீட்டில் பிணம் விழும் வரை. இவர்கள் ஆதரவு கொடுத்து கொண்டே தான் இருப்பார்கள்.

இதுகாறும் தமிழ் மாணவர்கள் காட்டில் வேட்டையாடிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தது போலவும், நீட் தேர்வு தான் அவர்களை முழுமைபடுத்தி மருத்துவர் ஆக்குவது போன்ற பிம்பத்தை இங்கு பதிவு செய்கிறார்கள். மருத்துவ கவுன்சிலிங் முறையில் சமூகநீதியை நிலைநாட்டி வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கிராமங்கள் வரை மருத்துவர்களை கொண்டுசேர்த்து தமிழக சுகாதாரத்துறை சிறந்த கட்டமைப்புடன் இயங்குகிறது. எப்படி NEP யில் தமிழ்நாடு ஏற்கனெவே அடைந்த இலக்கை தேச இலக்காக நிர்ணயித்து அந்த கொள்கையை அமல்படுத்த போகிறார்களோ, அதே போல் தான் மருத்துவ கல்விக்கு என தமிழகம் ஏற்கனெவே தார் ரோடு போட்டுக் கொடுத்த பிறகு, ஒத்தையடி பாதையை வளர்ச்சி எனக் கூறிக் கொண்டு நீட்டை கொண்டு வருகிறார்கள். ஏற்கனெவே சீட்டுக்காக மருத்துவ மாணவர்களை தற்கொலை எனும் போர்வையில் கொலை செய்து அந்த இடத்தை நிரப்ப பல கோடி வியாபாரம் நடப்பது அம்பலமாகிறது. நீட் ஒரு சில பணக்கார குடும்பங்களை மருத்துவர் குடும்பமாக்குமே தவிர, கிராமபுற மாணவர்களுக்கு நீட் ஒரு வல்லரக்கன்.

மாநிலத்தில் 11,12 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண் வேண்டாமெனில் எதற்காக பள்ளி செல்ல வேண்டும்? பள்ளிக்கல்வி விழலுக்கு இறைத்த நீரா ?

CBSE,ICSE மாணவர்கள் எளிதில் UPSC போன்ற தேர்வுகளில் வெற்றி பெறும் பாங்கை பார்த்திருக்கிறோம். காரணம் NCERT எனும் பாடதிட்டம் அவர்களுக்கு புதிதல்ல. ஏற்கனெவே மத்திய அரசு ஊழியராக இருக்கும் தம்பதிகளின் குழந்தைகளுக்கு என வடிவமைக்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயாக்கள் UPSC யை அவர்களுக்கு எளிமைபடுத்துகிறது.
இங்கு அரசு பள்ளி மாணவர்கள் UPSC எழுத திணறுவதை நாம் மறுக்க முடியாது. 25 வயதுகளில் எழுதும் இளைஞர்களுக்கே இத்தனை சிக்கல் எனில், பள்ளி குழந்தைகள் இந்த தேசிய போட்டியை 12 ஆம் வகுப்பு முடித்ததும் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்ற கேள்வி இளைய சமுதாயத்தின் உளவியல் சிக்கல்களை கண்முன்னே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதுவரை நல்ல மருத்துவர்களை தமிழகம் கொடுக்கவில்லையா ?
சராசரியாக 196 தான் குறைந்த கட் ஆஃப் மார்க்கே 200 ற்கு தமிழக மருத்துவ கல்வி கவுன்சிலிங்கில், அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு. அப்படி படித்து மதிப்பெண் பெறும் புத்திசாலி குழந்தைகள் தான் தமிழகத்தின் இன்றைய டாக்டர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் " கோட்டோவுல சீட் வாங்கி ஊசி போடுறான் " என விஜய் ஆண்டனி போன்ற பக்குவமற்ற இசை கலைஞரின் பாடலை போல சிலர் மருத்துவ கவுன்சிலிங்கை பார்க்கிறார்கள் ....நீட்டுக்கான ஆதரவு சமூக நீதி, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் மீதான வன்மமாக தான் தெரிகிறது.

2017 துவங்கி 9 சிறார்களின் மரணங்கள் அரசு கொண்டு வந்த கொள்கையால் ஏற்பட்டு இருக்கிறது. Happiness Index எனும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் வாழும் தேசம் எனும் அளவீட்டை குறிக்கும் தரப்பட்டியல் என்ற ஒன்றில் இந்திய தேசம் இனி வரும் காலங்களில் இடம்பெறாமலேயே கூட போகலாம். இது போன்ற மனசிக்கல்கள் இளைய சமுதாயத்தை வாட்டி வதைக்கின்றன.

அரசு மீது மொத்த பழியையும் திணித்துவிட்டு குற்றவுணர்ச்சியை வெளிக்காட்டாது, ஒவ்வொரு முறையும் இந்த பெற்றோர் கூட்டம் நீட் தற்கொலைகளை கடந்து செல்கிறது.
பதின் பருவத்தில் நாம் எவற்றை குழந்தைகளுக்கு மனதில் பதிய வைக்கிறோமோ , அவை பெரும் தாக்கத்தை உளவியல் ரீதியாக மாணவர்களின் மனதில் ஏற்படுத்துகிறது. நீட் என்பது வெறும் ஒரு நுழைவு தேர்வு தான் என்பதை விடுத்து, அது தான் வாழ்விற்கான வாசல், அதில் தோற்றால் வாழ்வே இல்லை, என்பது போன்ற கற்பிதங்களை பெற்றோரும், கோடிகளில் கொள்ளையடிக்கும் நீட் பயிற்சி மையங்களும் மாணவ - மாணவிகளிடம் விதைக்கின்றனர். உங்கள் பிள்ளைகளிடம் எந்த திறன் இயல்பிலேயே மிளிர்கிறதோ, அந்த திறன் சார்ந்த துறையிலேயே அவர்களுக்கு பயிற்சி அளியுங்கள். உங்கள் ஆசைகளை குழந்தைகளிடம் திணிக்காதீர்கள். இது கனவுகளை விரித்து பட்டாம்பூச்சியாய் பறக்க வேண்டிய வயது. உடைந்து போய் தற்கொலை செய்யும் வயதல்ல.
பதினாறு வயதில் ஒரு குழந்தை " I am tired " என்று சொல்வதற்கு பின் இருக்கும் வலி சொல்லி மாளாது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஓயாமல் படித்து பெறும் மதிப்பெண்களை விழலுக்கு நீராக இரைத்து விட்டு, அதன் பின்பு நுழைவு தேர்வு மூலமாக தான் மருத்துவ கல்வி எனில், பள்ளி படிப்பு எதற்கு பயன்பட போகிறது. இந்திய தேசத்தில் வேலையின்மை காரணமாக உயிரோடு இருக்கும் போதே பிணமாக வாழும் இளைஞர்களுக்கு மத்தியில், மத்திய அரசின் நீட் மாணவர்களை பிணமாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.கொஞ்சம் குழந்தைகள் நிம்மதியாக வாழட்டும். இது இளைஞர்களின் தேசம். ஆம் இன்னலுறும் இளைஞர்கள் அதிகம் வாழும் தேசம்.

#BanNeet என்பது தேசிய முழக்கமாக உருவெடுக்க வேண்டும்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை