தன்னுடைய வருங்கால கணவருடன் அமெரிக்காவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே செல்பி எடுத்த இந்திய இளம்பெண் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலா (27).இவர் அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஆந்திராவை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்திருந்தது. இந்நிலையில் இருவரும் சேர்ந்து நேற்று அட்லாண்டாவில் உள்ள கமலாவின் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு உறவினர்களை சந்தித்த பின்னர் காரில் வீட்டுக்கு திரும்பினர்.
வழியில் அங்குள்ள பால்டு ரிவர் அருவிக்கு செல்ல இருவருக்கும் ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து அருவியை பார்ப்பதற்காக சென்றனர். அருவியின் அருகே நின்று கொண்டு இருவரும் சேர்ந்து ஏராளமான போட்டோக்களை எடுத்தனர். ஒரு செல்பி எடுக்க முயற்சித்த போது இருவரும் எதிர்பாராமல் வழுக்கி கீழே விழுந்தனர். இது குறித்து அறிந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். இதில் கமலாவுக்குத் தான் அதிக காயம் இருந்தது. இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கமலா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அமெரிக்காவிலுள்ள தெலுங்கு சங்கத்தினர் தெரிவித்தனர்.