நடிகர் மோகன்லால் வழக்கம்போல இந்த வருடமும் திருச்சூரில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார்.
பிரபல மலையாள நடிகரான மோகன்லால் வருடந்தோறும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கம். ஆடி அல்லது ஆவணி மாதங்களில் ஒரு வாரம் திருச்சூர் அருகே உள்ள பெரிங்கோட்டுகரை ஆயுர்வேத மையத்தில் அவர் சிகிச்சை எடுத்துக் கொள்வார். இவ்வருடமும் வழக்கம்போல கடந்த சில தினங்களுக்கு முன் அவர் பெரிங்கோட்டுகரை ஆயுர்வேத மையத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
சிகிச்சை மையத்தில் மோகன்லால் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அங்கு நடந்த பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். இதற்கிடையே கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு தொடுபுழா மற்றும் எர்ணாகுளத்தில் நடைபெறுகிறது. முதல் பாகத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த மீனா உள்பட பெரும்பாலான நடிகர் நடிகைகள் இரண்டாவது பாகத்திலும் இருப்பார்கள் என தெரிகிறது. இந்த படத்திற்கு 'திரிஷ்யம் 2' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரிஷ்யம் தான் தமிழில் கமல், கௌதமி நடிப்பில் 'பாபநாசம்'ஆக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.