சீனப் படைகள் ஊடுருவல்.. மக்களவையில் இன்று ராஜ்நாத்சிங் விளக்க அறிக்கை..

by எஸ். எம். கணபதி, Sep 15, 2020, 10:03 AM IST

லடாக்கில் சீனப் படைகள் ஊடுருவிய விவகாரம் குறித்து மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று விளக்க அறிக்கை அளிக்கிறார்.
காஷ்மீரில் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, சீன ராணுவப் படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து சில பகுதிகளில் ஆக்கிரமித்தன. இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே குவிக்கப்பட்டன. இதன்பின், ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டுக்கு சென்றிருந்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப் பிறகு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாஸ்கோ சென்ற போதும் சீனாவின் வெளியுறவு அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எல்லைப் பிரச்னையை தீர்த்து கொள்ள 5 அம்சத் திட்டம் முடிவு செய்யப்பட்டது.


இதற்கிடையே, சீனப் படைகளின் ஆக்கிரமிப்புகளை தடுக்க மத்திய பாஜக அரசு தவறி விட்டதாகவும், வெளியுறவுக் கொள்கையில் பாஜக அரசு தோல்வியுற்று விட்டதாகவும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்று கோரி, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானங்களை அளித்துள்ளனர். இதையடுத்து, லடாக் எல்லையில் நடந்த சம்பவங்கள், சீன ஆக்கிரமிப்பு குறித்து மக்களவையில் இன்று விவர அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த அறிக்கையை இன்று(செப்.15) தாக்கல் செய்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஒரு இன்ச் பகுதியைக் கூட யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்று பிரதமரும், அமைச்சர்களும் பேசி வருகின்றனர். அதே சமயம், சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் வந்து ஆக்கிரமித்து விட்டதாகவும் அதை மத்திய அரசு மறைப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில், மத்திய அரசின் விவர அறிக்கை பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.


More India News

அதிகம் படித்தவை