செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று சமூக இணையதளங்களில் பரவும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அமலுக்கு வந்த முழு ஊரடங்கால் பொதுமக்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல..... ஏராளமான தொழில்கள் அழிந்தன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பலர் வருமானம் இழந்தனர். இதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்தது. இந்த பாதிப்பிலிருந்து கரையேற இன்னும் பல வருடங்கள் ஆகும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று சமூக இணையங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. கொரோனா நோய் பரவும் வேகம் தற்போது அதிகரித்து வருவதால் மத்திய பேரிடர் மேலாண்மை அமைப்பு இந்த ஆலோசனையை அரசுக்கு வழங்கியுள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு 46 நாட்கள் அமலில் இருக்கும் என்றும், மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் வேகமாகப் பரவியதால் பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர். ஆனால் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அறிவித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அந்த தகவலை நம்ப வேண்டாம் என்றும் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.