கிழக்கு லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிக்க முயற்சி.. மக்களவையில் ராஜ்நாத்சிங் விளக்கம்

China actions sparked LAC standoff India ready: Govt

by எஸ். எம். கணபதி, Sep 16, 2020, 09:36 AM IST

கிழக்கு லடாக் எல்லையில் சீனப்படைகள் இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.காஷ்மீரில் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, சீன ராணுவப் படைகள் இந்திய எல்லைக்குள் புகுந்து சில பகுதிகளில் ஆக்கிரமித்தன.

இந்தியா-சீனா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்று கோரி, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானங்களை அளித்திருந்தனர். இதையடுத்து, மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்தார். அப்போது அவா் கூறியதாவது:கிழக்கு லடாக்கில் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் படைகளைக் குவித்து பதற்றத்தை உருவாக்கி வருகிறது. கடந்த மே மாதம், கல்வான் பகுதியில் இந்தியப் படையினா் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, சீனப் படையினா் வேண்டுமென்றே மோதினர்.

இதையடுத்து, ஏற்கனவே இந்தியா-சீனா இடையே கடந்த 1993, 1996ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனாலும், சீனப்படைகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றன. கோங்காலா, கோக்ரா, பாங்காங் ஏரியின் வடக்கு கரை ஆகிய பகுதிகளில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அவர்களின் முயற்சியை இந்தியப் படையினர் முறியடித்தனர். கடந்த ஜூன் 15ம் தேதி கல்வானில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 போ் உயிரிழந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.கிழக்கு லடாக்கின் எல்லையில் ஏற்கனவே இந்தியாவிடம் இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகளை மாற்றியமைக்கச் சீனா தொடா்ந்து முயற்சித்து வருகிறது. அந்நாட்டுடன் தூதரக மட்டத்திலும், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது சீனாவின் ஒப்பந்த மீறல்கள் குறித்து இந்தியா தெளிவுபடுத்தி விட்டது.

எல்லைப் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. அதே சமயம், இந்தியாவின் எல்லையையும், இறையாண்மையையும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். மாஸ்கோவில் கடந்த வாரம் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வெய்பெங்கியை நான் சந்தித்துப் பேசியபோது இதைத் தெளிவாகத் தெரிவித்து விட்டேன். சீனாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சியையும் இந்தியா அனுமதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளோம்.லடாக் எல்லையில் நடப்பதை இந்த அவையில் தெரிவிக்க அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அதே சமயம், நமது ராணுவப் படைகள் மீது நாம் அனைவரும் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். மோசமான வானிலையிலும் கரடுமுரடான மலை உச்சிப்பகுதியில் நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினருக்கு ஆதரவாக, இந்த அவை ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
எல்லையில் சீனா படைகளைக் குவித்து வருவதும், தாக்குதலில் ஈடுபடுவதும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும். கடைசியாக, கடந்த வாரத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இடையே மாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தையில் 5 அம்ச திட்டம் முடிவானது. அந்தத் திட்டத்தைச் சீனா நேர்மையாக செயல்படுத்தினால் எல்லையில் அமைதி திரும்பும்.இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி உள்படக் காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க அனுமதி கோரினர். அதற்குச் சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை. அதனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்கும் போது பிரதமர் அவைக்கு வரவில்லை. இதிலிருந்தே எல்லையில் நடந்தவை குறித்து விவாதிக்க அரசு எவ்வளவு பயப்படுகிறது என்பது தெளிவாகிறது. காங்கிரசைப் பொறுத்தவரை நாடுதான் முக்கியம். ஆனால், காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாததால், பிரச்சனையை விவாதிக்க அரசு அஞ்சுகிறது என்று தெரிவித்தார்.

You'r reading கிழக்கு லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிக்க முயற்சி.. மக்களவையில் ராஜ்நாத்சிங் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை