இன்னும் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. நோய்த் தொற்று பரவலில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் இந்தியாவும்தான் இருக்கின்றன. அமெரிக்காவில் 2 லட்சம் பேர் வரை இந்நோயால் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயைச் சீனா திட்டமிட்டு உலகம் முழுவதும் பரப்பியிருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனமும் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா உள்படப் பல நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 3ம் கட்டப் பரிசோதனையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். ஏபிசி சேனல் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் நேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா தடுப்பு மருந்து இன்னும் 4 வாரங்களில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். முந்தைய ஆட்சிகளில் தடுப்பு மருந்துக்கு அனுமதி அளிக்க ஆண்டுக்கணக்கில் ஆகும். ஆனால், இப்போது உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை வேகமாகச் செயல்பட்டு வருகிறது. சில வாரங்களில் அனுமதி தரப்பட்டு விடும். ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வந்து விடும்;
இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நவம்பர்3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அந்நாட்டில் கொரோனா மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளதால், அது தேர்தலில் தனக்கு எதிராகப் போகும் என்று டிரம்ப் பயப்படுகிறார். அதனால், தேர்தலுக்கு முன்பு தடுப்பூசி தயாரித்து அளித்து விட வேண்டுமென்று டிரம்ப் விரும்புகிறார். அதற்காக அவர் மருந்து கட்டுப்பாட்டுத் துறை நிபுணர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும், அது தவறான விளைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.