கோல்டன் மாதங்களை கோட்டை விட்ட பாஜக.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..

by எஸ். எம். கணபதி, Sep 17, 2020, 12:46 PM IST

கோவிட்19 தொற்று இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கான வாய்ப்புகளை மத்திய பாஜக அரசு கோட்டை விட்டு விட்டதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை காலையிலும், மக்களவை பிற்பகலிலும் நடைபெறுகிறது. கோவிட்19 தொற்று குறித்து மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று அறிக்கை அளித்தார். அதையொட்டி நடந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது, மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.

அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் இவ்வளவு முன்னெச்சரிக்கையாக நாம் சோதனைகளைச் செய்த கூட்டத் தொடரை நடத்துகிறோம். அப்படியிருந்தும் பல உறுப்பினர்களுக்கே கொரோனா பாசிட்டிவ் எனப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. எங்கள் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இந்த நிலையில் இருக்கும் போது, மத்திய அமைச்சரின் அறிக்கையில் அரசைப் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

நாட்டில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தைத் தாண்டி விட்டது. 82 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அந்த 82 ஆயிரம் குடும்பங்களின் நிலை என்னவாகும்? அது சாதாரணமாகத் தெரிகிறதா? இந்த சூழலில் ஆயுஷ் அமைச்சகம், மருத்துவர்களுக்கு நடந்த பயிற்சி முகாமில் இந்தி தெரியாதவர்களை வெளியே போகச் சொல்லியிருக்கிறார். இந்த கொடூரமான தொற்று நோய் காலத்திலும் இந்தியைத் திணிப்பதா? என்று பேசினார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குலாம் நபி ஆசாத் பேசினார். அவர் பேசுகையில், சீனாவில் முதன்முதலில் கொரோனா பரவல் தோன்றிய போதே உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே எச்சரிக்கை விடுத்தது. சீனாவுக்குப் பக்கத்து நாடாக உள்ள இந்தியாவில் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? இந்தியாவில் இந்த நோய் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தப் போகிறது என்று ராகுல்காந்தி அப்போதே எச்சரித்தார். ஆனால், மத்திய அரசாங்கமோ, கோல்டன் பீரியட் அந்த ஆரம்பக்கால மாதங்களில் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாமல் கோட்டை விட்டு விட்டது. கோவிட்19 பரவலை அப்போதே கட்டுப்படுத்தக் கிடைத்த வாய்ப்புகளை அரசு தவற விட்டு விட்டது என்று குற்றம்சாட்டினார்.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை