கொரோனா களப்பணியில் மரணமடைந்த 382 டாக்டர்கள் குறித்து பாராளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் எதுவும் கூறாதது வேதனையளிக்கிறது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.இந்திய மருத்துவ சங்கமான ஐஎம்ஏ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பது: இந்தியாவில் கொரோனா களப்பணியில் பணியாற்றிய சுகாதாரத் துறையைச் சேர்ந்த 382 டாக்டர்கள் இதுவரை மரணமடைந்துள்ளனர். உலகத்திலேயே இந்த அளவுக்கு எங்கும் டாக்டர்கள் மரணமடைந்தது இல்லை.
ஆனால் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது டாக்டர்கள் மரணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் சுகாதாரத் துறை இணையமைச்சர் அஷ்வின் குமார் பேசும்போது, டாக்டர்கள் மரணம் தொடர்பாக தங்களிடம் எந்த புள்ளி விவரங்களும் இல்லை என்று கூறினார்.இது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள டாக்டர்களை புறக்கணிக்கும் வகையில் பேசிய அமைச்சர்களுக்கு ஐஎம்ஏ சார்பில் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உயிரைத் துச்சமாக மதித்து சேவை செய்யும் டாக்டர்களுக்கு மத்திய அரசு எந்த முன்னுரிமையும் அளிப்பதில்லை. மரணமடைந்த 382 டாக்டர்களில் 27 வயது முதல் 85 வயது வரை உள்ளவர்களும் உள்ளனர்.பொதுச் சுகாதாரமும், மருத்துவமனைகளும் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசிடம் மரணமடைந்த டாக்டர்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை என்று இணை அமைச்சர் அஸ்வின் குமார் கூறியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அமைச்சரின் இந்த பேச்சு கொரோனா களப்பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இழிவு படுத்துவது போல உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.