நாடாளுமன்ற மக்களவைத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று இரவு நாடாளுமன்ற அலுவல் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் இந்த முடிவை எடுக்கலாம் எனத் தெரிகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை சுமார் 30 எம்பிக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் கூட்டம் முடிந்த பிறகே உறுதியான தகவல் வெளியாகும்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்ட பல எம்பிக்கள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட போதே கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அதேபோல் திருப்பதி எம்பி, துர்கா பிரசாத், தமிழக எம்பி வசந்தகுமார் உள்ளிட்ட பல எம்பிக்கள் கொரோனா தொற்றால் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து எம்பிக்களுக்கு மேலும் கொரோனா பரவும் அச்சம் இருப்பதால் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.