தொடரும் பிரச்சினைகள் பேரீச்சம்பழ சிக்கலில் தவிக்கும் கேரள அரசு

Cases over dates, quran from uae consulate customs intensifying investigation

by Nishanth, Sep 20, 2020, 11:39 AM IST

கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் அமீரக தூதரகம் மூலம் கொண்டுவரப்பட்ட 17ஆயிரம் கிலோ பேரீச்சம்பழம் குறித்து கேரள அரசிடம் விளக்கம் கேட்க சுங்க இலாகா தீர்மானித்துள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கேரள அரசு சிக்கலில் தவித்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்ததாக எழுந்த புகாரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அடுத்ததாக ஸ்வப்னா சுரேஷுடன் கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஜலீல், கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி, கேரள தொழில் துறை அமைச்சரின் மகன் உள்பட பல பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே மேலும் ஒரு கேரள அமைச்சருக்கும் ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடமும் விசாரணை நடத்த மத்திய விசாரணைக் குழுக்கள் தீர்மானித்துள்ளன.
இதற்கிடையே தங்கக் கடத்தல் விவகாரம் வெளியே வந்த பின்னர் தான் தூதரக பார்சலில் அனுமதி இல்லாமல் மத நூல்கள் மற்றும் கிலோ கணக்கில் பேரீச்சம்பழம் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு வினியோகிப்பதற்காக இந்த பேரீச்சம்பழம் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. மொத்தம் 17ஆயிரம் கிலோ பேரிச்சம்பழம் கொண்டுவரப்பட்டது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு அவை கொடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த பேரீச்சம்பழம் வந்த பார்சலிலும் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் விசாரணைக் குழுக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தவிர மத நூல்கள் கொண்டு வரப்பட்ட பார்சலிலும் தங்கம் கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.


இதையடுத்து இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக சுங்க இலாகா நேற்று 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கவும் சுங்க இலாகா முடிவு செய்துள்ளது. எவ்வளவு கிலோ பேரீச்சம்பழம் கொண்டுவரப்பட்டது, எங்கெல்லாம் விநியோகிக்கப்பட்டது உட்பட விவரங்களை கேரள அரசிடமிருந்து சேகரிக்க சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. இது தவிர தேசிய புலனாய்வு அமைப்பும் இது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை