ராஜ்யசபாவில் கடும் அமளி.. 2 மசோதாக்கள் நிறைவேற்றம்..

Parliament passed two Farm Bills with Rajya Sabha approving it.

by எஸ். எம். கணபதி, Sep 20, 2020, 17:34 PM IST

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, வேளாண்மை தொடர்பான 2 சட்ட மசோதாக்கள், குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்திய 2 விவசாயத் துறை அவசரச் சட்டங்களுக்கு மாற்றாக புதிய சட்டமசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. விவசாய உற்பத்தி மற்றும் வர்த்தக மேம்படுத்துதல் மசோதா, விவசாயப் பொருட்கள் விலை நிர்ணயம் ஆகிய அந்த மசோதாக்களுடன், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திருத்த மசோதா என்று 3 மசோதாக்கள் முதலில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் 2 வேளாண் மசோதாக்களையும் வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்தரசிங் தோமர் இன்று காலையில் அறிமுகம் செய்தார். அப்போது, அவர் பேசும் போது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு, விவசாயிகளிடமும், மாநில அரசுகளிடமும் ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
வேளாண் சட்ட மசோதாக்களின் மூலம், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்றும், அதனால் அவர்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


இதையடுத்து, மசோதாக்கள் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப்சிங் பஜ்வா பேசும் போது, இந்த மசோதாக்கள் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு எதிரானவை என்று குறிப்பிட்டார்.
திரிணாமுல் கட்சி உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் பேசும் போது, இந்த மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி பரிசீலித்த பின்புதான் நிறைவேற்ற வேண்டும் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராகேஷ் ஆகியோர் மசோதாக்களில் திருத்தங்களை கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் நரேந்தரசிங் தோமர் பேசும் போது, பகல் 1 மணி ஆகி விட்டது. ஆனால், அவர் பேசி முடிக்கும் வரை அவை நேரத்தை நீட்டிப்பதாக அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்தார்.
திரிணாமுல், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையை ஒத்தி வைத்து, அமைச்சரின் பதிலுரையை நாளை எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அமைச்சர் தோமர் பதிலுரையை தொடருவதற்கு அனுமதி அளித்தார்.


இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால், துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார். மீண்டும் பிற்பகல் 1.41 மணிக்கு கூடியதும் 2 வேளாண் மசோதாக்களின் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில், டெரிக் ஓ பிரையன் பேரவை விதி புத்தகத்தைக் காட்டி, அவையை ஒத்தி வைக்கக் கோரினார். ஆனால், துணை தலைவர் ஹரிவன்ஷ் அதை ஏற்கவில்லை. உடனே, அவை தலைவர் இருக்கை முன்பாக சென்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மைக்கை பிடித்து இழுத்தனர். சபைக் காவலர்கள், துணைத் தலைவரை சூழ்ந்து நின்று கொண்டு அதை தடுத்தனர்.
இதன்பின்னர், எதிர்க்கட்சிகளின் பலத்த கூச்சல், குழப்பங்களுக்கு இடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. மசோதாக்களில், எதிர்க்கட்சிகள் கொடுத்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருட்கள் சட்ட மசோதா இன்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவில்லை.

You'r reading ராஜ்யசபாவில் கடும் அமளி.. 2 மசோதாக்கள் நிறைவேற்றம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை