ராஜ்யசபா துணை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..

Opposition parties submit no-confidence motion against Rajya Sabha deputy chairman Harivansh.

by எஸ். எம். கணபதி, Sep 20, 2020, 17:39 PM IST

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது 12 எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளன.
மாநிலங்களவையில் இன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக கூறி, காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராகேஷ் ஆகியோர் மசோதாக்களில் திருத்தங்களை கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் நரேந்தரசிங் தோமர் பேசும் போது, பகல் 1 மணி ஆகி விட்டது. ஆனால், அவர் பேசி முடிக்கும் வரை அவை நேரத்தை நீட்டிப்பதாக அவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்தார்.


திரிணாமுல், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையை ஒத்தி வைத்து, அமைச்சரின் பதிலுரையை நாளை எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அமைச்சர் தோமர் பதிலுரையை தொடருவதற்கு அனுமதி அளித்தார்.
இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். இதனால், துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தார். மீண்டும் பிற்பகல் 1.41 மணிக்கு கூடியதும் 2 வேளாண் மசோதாக்களின் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அப்போதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை தலைவர் இருக்கை அருகே சென்று அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் பலத்த கூச்சல், குழப்பங்களுக்கு இடையே குரல் வாக்கெடுப்பின் மூலம் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.


இந்நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது எதிர்க்கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் உறுப்பினர் அகமது படேல் கூறுகையில், மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ், ஜனநாயக நடைமுறைகளை மீறி விட்டார். அதனால், அவர் மீது 12 எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை