சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்து வரும் நிலையில் அந்நாட்டிலிருந்து எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் இறக்குமதி செய்யத் தடை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் பகுதியில் சீனா அத்துமீறி நடந்து கொண்ட சம்பவத்திற்குப் பின்னர் இந்தியா, சீனா இடையே பதற்ற நிலை ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக இந்தியாவில் செயல்பட்டு வரும் 200க்கும் மேற்பட்ட சீன மொபைல் செயலிகளைத் தடை செய்தது.
மேலும் இந்தியா வணிக ரீதியாகச் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து உபகரணங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, சீனாவில் இருந்து மின்னணு உபகரணங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்வது குறித்த எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை எனக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறியது: இந்தியா முழுவதும் எலக்ட்ரானிக்ஸ் பாகங்கள் எளிதாகக் கிடைக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சந்தையில் குறிப்பிட்ட நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்காக உள்நாட்டில் மின்னணு உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது.
கோவிட் 19 போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் உள்நாட்டுச் சந்தையில் பெரிய அளவிலான பற்றாக்குறையை ஏற்படுத்தாது. சமீப காலங்களில், இந்தியா தனது வணிக ரீதியான அமைப்பில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கப் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதே நேரத்தில் 5ஜி நெட்வொர்க் போன்ற உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களில் இருந்து ஹுவாய், இசட் டி இ போன்ற நிறுவனங்களை விலக்குவது குறித்த எந்தவொரு திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என அவர் கூறினார்.