மத்திய அரசு ஜனநாயக மாண்புகளைச் சிதைப்பதாகக் கூறி, ஜனாதிபதியிடம் இன்று(செப்.23) மாலை புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, அவற்றில் திருத்தங்களைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். தேர்வுக் குழுவுக்கு அனுப்பவும் வலியுறுத்தின. அதை அரசு தரப்பில் ஏற்கவில்லை.
இதையடுத்து, மசோதாக்கள் மீது டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். அதை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை தலைவர் இருக்கை அருகே சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மைக்கைப் பிடித்து இழுத்து உடைக்க முயற்சித்தனர். விதி புத்தகங்களைக் கிழித்து வீசியெறிந்தனர்.
இதைத் தொடர்ந்து, திரிணாமுல் கட்சியின் டெரிக் ஓ பிரையன், டோலா சென், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதவ், சையத்நாசர் ஹுசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கட்சியின் கே.கே.ராஜேஷ், எலமரம் கரீம், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங் ஆகிய 8 உறுப்பினர்கள் அவை விதிகளை மீறி விட்டதாகக் கூறி, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாநிலங்களவையில் மசோதாக்கள் மீது விதிகளை மீறி குரல் வாக்கெடுப்பு நடத்தியாக துணைத் தலைவர் மீதும், அரசு மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.மேலும், 8 உறுப்பினர்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால், இந்த தொடர் முழுவதும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தன.
ஆனால், மத்திய அரசோ, மாநிலங்களவை தலைவரோ அதை ஏற்கவில்லை. அதனால், காங்கிரஸ், திரிணாமுல், திமுக உள்ளிட்ட 12 எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துள்ளன. இன்று காலையில் அந்த கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக கூடி, தர்ணா போராட்டம் நடத்தினர். விவசாயிகளைக் காப்பாற்று, ஜனநாயகத்தைக் காப்பாற்று என்று எழுதப்பட்ட பேனர்களைப் பிடித்தபடி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மத்திய பாஜக அரசு, ஜனநாயக நடைமுறைகளையும், மாண்புகளையும் சிதைத்து விட்டதாகக் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சந்தித்து, புகார் மனு அளிக்கவுள்ளனர். அப்போது வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்தும், 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்தும் புகார் அளிக்கவுள்ளனர்.இதற்கிடையே, மாநிலங்களவைக் கூட்டத் தொடரை இன்றுடன் முடித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதை நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முரளிதரன், அவையில் தெரிவித்தார்.