ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன்: இன்று முதல் இந்தியாவில் ஆரம்பம்..!

by SAM ASIR, Sep 23, 2020, 15:54 PM IST

வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களிடமிருந்து பொருள்களை வாங்குவதற்கான இணைய விற்பனையை ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 23ம் தேதி முதல் இந்தியாவில் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் நேரடி வாடிக்கையாளர் சேவை, பழைய பொருள்களை மாற்றும் டிரேட்-இன், மாணவருக்கான சலுகை மற்றும் நிதி வசதி தெரிவுகளும் இதில் வழங்கப்படும்.

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் அங்கீகாரம் பெற்ற சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மட்டுமே விற்கப்பட்டு வந்தன. தற்போது வாடிக்கையாளர்கள் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்தே நேரடியாகப் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். வாங்கப்பட்டு 24 முதல் 72 மணி நேரத்திற்குள் பொருள் அனுப்பப்படும். ஆனாலும் மேக் (Mac) வகை கணினி போன்றவற்றுக்கு அனுப்பப்படக்கூடிய காலம் ஒரு மாதம் என்று உள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஸ்டோர் ஆன்லைன் மூலம் ஆப்பிள் நிறுவன அலுவலர்களிடம் அழைப்பு (call) அல்லது அரட்டை (chat) மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தயாரிப்பை வாங்குவதில் உதவி, ஆலோசனை, வழிகாட்டலைப் பெறலாம். தங்களுக்கு வேண்டியபடி கணினியை வடிவமைக்கும் (custom-configuring) தகவலைத் தரலாம்.பழைய ஐபோன்களை கொடுத்து மீதம் தேவையான பணத்தைச் செலுத்தி புதிய ஐபோனை வாங்க முடியும். இதற்கான டிரேட்-இன் சேவையில் ரூ.35,000/- மதிப்பு வரைக்கும் புதிய ஐபோனில் கழிக்கப்படும்.

கொடுக்கப்படும் பழைய சாதனங்களின் தகுதி தன்மை, தயாரிப்பு ஆண்டு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயித்து நிறுவனம் எடுத்துக்கொள்ளும். பழைய பொருள்கள் ஆய்வு செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு புதிய பொருளுக்கான விலையில் கழிவு கிடைக்கும்.மாணவ மாணவியர்,பேராசிரியர்களுக்கான சலுகை விலை, எச்டிஎஃப்சி வங்கி அட்டைதாரர்களுக்குச் சலுகை போன்ற பல சிறப்பம்சங்கள் தற்போது ஆப்பின் ஸ்டோர் ஆன்லைனில் உள்ளது.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Technology News