ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 217 என்ற மிகப்பெரிய இலக்கை எட்டவேண்டிய நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஏழாவது வீரராகக் களமிறங்கியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 69 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்தார். மொத்தத்தில் 216 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்திருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் வரிசையைக் கம்பீர் விமர்சித்துள்ளார். சிஎஸ்கே அணியின் சார்பாக டூ பிளஸ்ஸிஸ் மட்டும் நிலைத்து ஆடி 37 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட், சாம் குர்ரன், கேதார் ஜாதவ் போன்ற வீரர்களை தனக்கு முன் இறக்கி அணி 114/5 என்ற இக்கட்டான நிலையிலிருந்தபோது 14வது ஓவரில் ஏழாவது வீரராக பேட்டிங் செய்ய வந்தது புத்திசாலித்தனமான முடிவாகத் தெரியவில்லை என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
அணியின் வெற்றிக்கு இன்னும் 103 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறங்கிய அவர், சற்று முன்னதாக பேட்டிங் செய்ய வந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 38 ரன்கன் தேவைப்பட்ட நிலையில் தோனி 20 ரன்கள் விளாசினார். ஆனால், அதனால் எந்தப் பலனும் இல்லையென்றும் அவர் 4 அல்லது 5 வது வரிசையில் வந்திருக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் செப்டம்பர் 25ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.