உபியில் மீண்டும் கொடுமை 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது..

by Nishanth, Sep 23, 2020, 16:42 PM IST

உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுமியைப் பள்ளிக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. இது தொடர்பாக அப்பள்ளியின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை இங்குப் பலாத்காரத்திற்கு இரையாகி வருகின்றனர். இந்நிலையில் 5 வயது சிறுமியைப் பள்ளிக்கு வரவழைத்து ஆசிரியரே பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு புதிய மாணவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக அப்பள்ளியைச் சேர்ந்த 40 வயதான ஒரு ஆசிரியர் சில மாணவிகளைப் பள்ளிக்கு வருமாறு அழைத்திருந்தார். இதன்படி அப்பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி உட்பட சில மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர். பின்னர் மற்ற மாணவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு அந்த 5 வயது சிறுமியை மட்டும் ஆசிரியர் அங்கேயே இருக்குமாறு கூறினார்.

பின்னர் அந்த சிறுமியை வகுப்பறையில் வைத்து ஆசிரியர் பலாத்காரம் செய்துள்ளார். நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குச் சென்ற அந்த சிறுமியிடம் விசாரித்தபோது ஆசிரியர் பலாத்காரம் செய்த சம்பவம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் அந்த ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மீரட் எஸ்பி அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை