8 நாள் முன்பாகவே முடிக்கப்பட்டது நாடாளுமன்ற தொடர்..

Parliment session adjourned sine-die.

by எஸ். எம். கணபதி, Sep 24, 2020, 09:21 AM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 8 நாள் முன்னதாகவே நேற்று முடிக்கப்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. காலையில் மாநிலங்களவையும், பிற்பகலில் மக்களவையும் நடத்தப்பட்டன. சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்பட வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூட்டத் தொடர் நடைபெற்றது.இந்த கூட்டத் தொடர், அக்டோபர் முதல் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், 8 நாட்கள் முன்பாக முடிக்கப்பட்டு விட்டது. மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது, காங்கிரஸ், திமுக, திரிணாமுல், இடதுசாரிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மசோதாக்கள் மீது டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. அதை அவை துணைத் தலைவர் ஹர்வன்ஷ் நிராகரித்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களை நிறைவேற்றினார்.

அப்போது அவைத் தலைவர் இருக்கை அருகே சென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். விதிப் புத்தகங்களைக் கிழித்தெறிந்தனர். மைக்கை உடைக்கும் முயற்சியும் நடைபெற்றது. இதையடுத்து, திரிணாமுல் மூத்த உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் உள்பட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் இந்த தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இந்நிலையில்தான், நேற்றுடன் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.பத்து நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில், மாநிலங்களவையில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

வேளாண் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது, அவையில் நடந்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டுப் பேசிய வெங்கய்ய நாயுடு, எதிர்காலத்தில் இது போன்று நடைபெறக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.மக்களவையும் நேற்று மாலையில் ஒத்தி வைக்கப்பட்டது. பெரிய துறைமுகங்கள் ஆணைய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், அவை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், 17வது மக்களவையின் இந்த 4வது தொடரில் 167 சதவீதப் பணிகள் நடைபெற்றுள்ளது. நட்சத்திரக் குறியிடப்படாத 2 ஆயிரத்து 300 கேள்விகளுக்கு அவையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. பூஜ்ய நேரத்தில் 370 கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டது. மேலும், விதி 377ன் கீழ் உறுப்பினர்கள் 181 கேள்விகளை எழுப்பினர். அவை அந்தந்த அமைச்சகங்களுக்கு அனுப்பப்பட்டது என்று குறிப்பிட்டார்.R

You'r reading 8 நாள் முன்பாகவே முடிக்கப்பட்டது நாடாளுமன்ற தொடர்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை