கொரோனா பாதிப்பு அதிகமாக மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பது பற்றி மாநில முதல்வர்களே முடிவு செய்யலாம் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டிலேயே மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகப் பரவியிருக்கிறது. குறிப்பாக, இந்த மாநிலங்களில் உள்ள 60 மாவட்டங்களில் அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.
இந்நிலையில், இந்த ஏழு மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாகப் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு(செப்.23) ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், அந்த மாநிலங்களின் தொற்று தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:நாட்டில் தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களில் 63 சதவீதம் பேர் இந்த மாநிலங்களில்தான் உள்ளனர். அதிக பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், தொற்று பரவாமல் கண்காணித்தல் மற்றும் தீவிர சிகிச்சையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைகளுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் 50 சதவிகிதத்தை, மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்பு 35 சதவிகித நிதியை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இப்போது அதை அதிகப்படுத்துகிறோம்.இந்த பேரிடர் காலத்திலும் இந்தியா, உலக நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், மாநிலங்களுக்கு இடையே இடையூறு இல்லாமல் மருந்துகளை அனுப்ப வேண்டும்.
கொரோனா அதிகம் பாதித்த மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கை அறிவிப்பது குறித்து முதலமைச்சர்களே முடிவு செய்யலாம். குறிப்பாக ஊராட்சி ஒன்றிய அளவில் தொற்று பரவாமல் தடுப்பதற்குக் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இன்னும் 7 மாவட்டங்களில் மட்டும் நோய்ப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, இந்த மாவட்டங்களில் தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசின் ஆயூஷ் சஞ்சீவினி செயலியைத் தமிழகம் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தொற்று பாதிப்பை எதிர்த்து போராடும் அதே வேளையில், பொருளாதார சீரமைப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 3000 கோடி நிதித் தொகுப்பை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரம் கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளுக்கு ஆகும் செலவில் 50 சதவிகிதத்தையாவது பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.